என் மன வானில்

Wednesday, March 29, 2006

மறக்க முடியாத தருணங்கள்-3

மறக்க முடியாத தருணங்கள்-3

சமீபத்தில் நடந்த ஓர் சுவையான நிகழ்ச்சி.

நான் சமீபத்தில் எங்க ஊருக்கு விடுமுறையில் சென்று வந்தேன்.அப்போது நான் ஊரில் இருந்த சமயத்தில் என் இனிய நண்பர் திருமணத்துக்காக நானும் என் மனைவியும் வாசுதேவநல்லூர் வரை சென்றிருந்தோம்.

வாசுதேவநல்லூர் தென்காசியில் இருந்து 40 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரை சேர்ந்தவர் தான் இயக்குனர் S.J.சூர்யா.சரி விசயத்துக்கு வருவோம். எங்கள் ஊரில் இருந்து வாசுதேவநல்லூர் நீண்ட தூரமாக இருப்பதால் முதன் முறையாக எங்கள் செல்ல மகளை என் அம்மாவிடம் விட்டு விட்டு சென்று விட்டோம்.

திருமணம் முடிந்து அப்படியே இன்னொரு நண்பரை தென்காசியில் சந்தித்து விட்டு அப்படியே குற்றாலம் சென்று குளித்து விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு சில பொருட்களை ஞாபகார்த்தமாக வாங்கி சென்றோம்.

அதில் என் மகளுக்கு ஒரு நைட்டி வாங்கினோம். அப்புறம் நான் சவுதி வந்து விட்டேன். ஒரு நாள் என் மகள் அஸிரா (வயது 3+) ஏதேச்சையாக சொல்லியிருக்கா என் மனைவியிடம்,நீயும் டாடியும் என்னை விட்டுட்டு ஊருக்கு போனீங்கள்ல அப்போ எனக்கு ஒன்னுமே சரியா வரும் போது வாங்கிட்டு வரலைன்னு.

அதுக்கு என் மனைவி சொல்லி இருக்காங்க ஏன் உனக்கு தான் நைட்டி வாங்கிட்டு வந்தோமே என்று. அதுக்கு வாண்டு சொல்லியிருக்கு சீ... அது எனக்கு புடிக்கவே இல்லை.நல்ல ட்ரஸ் வாங்கிட்டு வந்தா என்னாவான்னு கேட்டிருக்கா.

அதுக்கு அப்புறம் அந்த நைட்டியை வாண்டு போட்டுக்கவே மறுத்து விட்டதாம்.இத என் மனைவி என்னிடம் தொலைபேசும் போது சொன்னாள்.நானும் உடனே மனசுக்குள் நினைத்து கொண்டேன் அவளுக்கு அந்த நைட்டி பிடிக்கலை போலிருக்குன்னு.

சில நாட்கள் கழித்து என் மகளிடம் தொலைபேசும் போது கேட்டேன். ஏம்மா உனக்கு நான் வாங்கி கொடுத்த நைட்டி பிடிக்கலையான்னு. நான் கேட்டு முடிப்பதற்குள் முந்தி கொண்டு என் மகள் இல்லையே எனக்கு அந்த நைட்டி பிடிக்குமே.நீங்க ஊருக்கு வரும் போது அதே மாதிரி ஐந்து நைட்டி வாங்கிட்டு வாங்க டாடின்னு சொல்ல அவளின் சமயோஜித புத்தியை நினைத்து சிரித்து விட்டேன்.

அப்புறம் மறுநாள் மனைவியிடம் இருந்து குறுந்தகவல் வருகிறது அன்றிறவு அடம் பண்ணி அந்த நைட்டிய போட்டுகிட்டு தான் உங்க மகள் இரவு தூங்கினாள் என்று.இது எப்படி இருக்கு.நான் மனசுக்குள் நினைத்து கொண்டேன்.இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் விவரமானவங்க நம்மள மாதிரி இல்லைன்னு.

நேசத்துடன் முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-2

மறக்க முடியாத தருணங்கள்-2
கல்லூரி நாட்கள் வாழ்வின் வசந்த காலம்.பசுமையான நினைவுகளின் பெட்டகம்.சுதந்திரமாய் சுற்றி திரிந்த அந்த கல்லூரி நாட்கள் அப்பப்பா இப்போதும் நினைத்து பார்க்கையில் நாக்கில் எச்சில் ஊறுகிறது.
நான் படித்தது முதல் மூன்று வருடங்கள் மாலை நேரக் கல்லூரியில். எங்கள் கல்லூரி (autonomous) தன்னிச்சையாக செயல்படும் கல்லூரிகளில் முதலிடத்தை ஓர் வருடம் வகித்திருக்கிறது.நம்ம இயக்குனர் T.ராஜேந்தர் படித்த கல்லூரியும் இது தான்.அப்புறம் ஒரு தலைராகம் படமாக்கப்பட்டதும் இக்கல்லூரியில் தான்.மாங்கா மடையா கல்லூரி பெயரை சொல்லுடான்னு நீங்கள்லாம் திட்டுறது என் காதில் விழுகிறது. A.V.C. கல்லூரி,மயிலாடுதுறை.

மாலை நேரக் கல்லூரி என்பதால் பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.ஆனால் இளங்கலையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களூக்கும் தனித்தனி வகுப்புகள் தான்.நீங்கலெல்லாம் feel பண்ணுறது எனக்கு புரியுது.என்ன பண்ண.காலத்தின் கட்டாயம்.

ஒரே ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியை சொல்லி முடித்து கொள்கிறேன் அப்போதைக்கு.கல்லூரியில் சேர்ந்து ஓர் இரண்டு மாதங்கள் இருக்கும். நான் அன்று சற்று ஓர் 15 நிமிடங்கள் தாமதமாக வகுப்புக்கு சென்றேன்.
தமிழ் விரிவுரையாளர் என்னை மேலும் கீழும் பார்த்தார்.பிறது வருகை பதிவேடு எடுத்து பார்த்தார்.அப்போது தான் தெரிந்தது என் நண்பன் எனக்காக அடெண்டென்ஸ் கொடுத்திருந்தது.
திட்டி தீர்க்கப்போகிறார் என்று அனைவரும் இறுக்கத்துடன் அமர்ந்திருக்க சிறிது நேரம் அமைதி காத்த ஆசிரியர் சரி உள்ளே வா என்று எனக்கு அனுமதி அளித்துவிட்டு அடப்பாவிங்களா,இத்தனை நாளா வகுப்புக்கு வராதவனுக்கு தான் அடெண்டென்ஸ் கொடுப்பீங்கன்னு நினைச்சிருந்தா வகுப்புக்கு வர்றவனுக்கும் கொடுத்திருக்கீங்களேப்பான்னு வாய் விட்டு சிரிச்சார்.
சிறிது நேரம் அறை முழுவதும் சிரிப்பலைகளும்,விசில் சத்தமும்,மேசை தட்டலும் இனிதே அரங்கேறியது....
ஹிஹி
நேசத்துடன்-முஜிப்

Sunday, March 26, 2006

என் மகள் அடித்த லூட்டி

என் மகள் அடித்த லூட்டி

சமீபத்தில் நான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சி. அன்று எங்கள் வீட்டின் குளிர் சாதனப் பெட்டி பழுது
பார்ப்பதற்காக AC technician வந்திருந்தார்.


அப்போது அறையை திறந்து உள்ளே சென்ற போது என் கூடவே என் மகள் அஸீராவும்,என் தங்கை மகளும் (வயது 3+இருவருக்கும்) உடன் வந்து கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துகொண்டிருந்தார்கள்.

வந்தவர் பழுது பார்த்து கொண்டிருந்தார்.நான் இருவரையும் சண்டி பண்ணாமல் உட்கார்ந்திருக்கனும் என்று சொல்லி கொண்டிருந்த போது எனது அம்மா,எனக்கும் வந்தவருக்கும் தேனீர் கொண்டு வந்து என்னை கூப்பிட்டார்கள்.

நான் அதை வாங்கி வந்து AC technician வசம் மரியாதையாக காபி சாப்பிடுங்க என்று சொல்ல போக, இதை உன்னித்து பார்த்து கொண்டிருந்த என் மகள் டக்கென்று
காபி எல்லாம் சாப்பிட கூடாது டாடி,குடிக்கணும்
ன்னு சொல்ல,என் முகத்தில் ஈ ஆடாத குறையாக இஞ்சி தின்ற குரங்காக நான் வழிய,பழுது நீக்க வந்திருந்தவர் குபீர் என அவரை அறியாமலே சிரித்து விட்டார்.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-1

மறக்க முடியாத தருணங்கள்-1

ஐஸ் கிரீம் என்றவுடன் மறக்காமல் நினைவுக்கு வருவது.சே!!!இது என்ன விளம்பரமா என்ன.என்னடா எடுத்த எடுப்புலேயே கடிக்கிறானேன்னு பயந்துறாதீங்க.இதுவும் என் வாழ்வின் மறக்க முடியாத சுவாரஸ்யமான விசயம் தான்.சமீபத்தில் நான் விடுமுறையில் சென்றிருந்த போது ஒரு உறவினர் வீட்டுக்கு நட்பு பாராட்ட செல்லும் வழியில் ஓர் பல்பொருள் அங்காடிக்கு அவர்கள் வீட்டுக்கு கொஞ்சம் பிஸ்கெட்,பழம்,ஸ்வீட்ஸ் வாங்கலாம் என்று சென்றேன்,என் இரு குழந்தைகளோடு(என் மனைவி,மகள்).

வெளியே சென்றால் இருவரும் சாப்பிடும் விசயத்தில் குழந்தைகள் தான்,எதையும் முழுவதுமாக,ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள்.அரைகுறை தான்.(இப்படி தான் ,ஒரு முறை ஓர் ஹோட்டலுக்கு சென்று ஸ்பெஸல் தோசை ஆர்டர் செய்து என் மனைவி பாதிக்கு மேல் சாப்பிட முடியாமல் நெளிய அக்கம் பக்கம் பார்த்து யாருக்கும் தெரியாமல் திட்டி விட்டு நான் எடுத்து வைத்து தின்னு தொலைத்தேன்.சரி விசயத்துக்கு வர்றேன்.

அப்போது என் மகள் ஐஸ் கிரீம் வேண்டும் என்று அடம்பிடிக்க நான் ஒரு சின்ன ஐஸ் கீரிமை எடுத்து கொடுக்க கிங் சைஸ் தான் வேண்டும் என்று என் மகள் அடம் பிடிக்க அதையே எடுத்து கொடுக்க வேண்டியதாயிற்று.என் மனைவிக்கும் அதே போல் ஒரு ஐஸ்கிரீம் எடுத்து கொடுத்தேன்.நீங்களும் ஒன்னு எடுத்துக்கங்கன்னு என் மனைவி சொல்ல ,நான் பெருந்தன்மையா எனக்கு வேணாம்னு show காட்டினேன்.

என் மனசுக்குல்ல ஐஸ்கிரீம் சாப்பிடனும்னு எச்சில் ஊறினாலும் பாதிக்கு மேல சாப்பிடாம ஐஸ்கிரீம் நமக்கு தானே வரப்போறதுன்னு நினைப்பு.இருவரும் முக்கி முக்கி முழுவதுமாக சாப்பிட்டு விட்டார்கள்.நக்கியாவது கடைசியில் டேஸ்ட் பார்க்கலாம்ன்னு பார்த்தால் இருவரும் அதற்கும் இடம் வைக்கவில்லை.

கடைசியாக வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது பொறுக்க முடியாது என் மனைவியிடம் சொன்னேன்.நல்லா இரண்டு பேரும் கொஞ்சம் கூட எனக்கு கொடுக்காம தின்னு பழி வாங்கிட்டீங்கல்லன்னு.சரியான ட்யூப் லைட்டு!!! யாரு ஐஸ்கீரிம சாப்பிடாம தூக்கி கொடுப்பான்னு என் மனைவிக்கு ஒரே சிரிப்பு நல்லா வேணும்,நல்லா வேணும்னு!!.

நினைப்பு பொழப்ப கெடுத்துச்சாம்.அன்றைக்கு அது என் விசயத்தில் உண்மையாகிவிட்டிருந்தது.ஆனாலும் எனக்குள் ஓர் ஆத்ம திருப்தி,கொடுத்த பணத்துக்கு வேஸ்ட் பண்ணாம சாப்பிட்டு முடித்து விட்டார்களே என்று.
புண்பட்ட மனச புகை போட்டு ஆத்திக்கணும் என்பார்களே,அது இப்படி தானா என்கிறீர்களா அன்பர்களே?

நேசத்துடன்
முஜிப்

Wednesday, March 22, 2006

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா?

ஓர் சுவையான உண்மை நிகழ்ச்சியின் மூலம் என் உரையை சுருக்கமாஆரம்பித்து முடிக்கலாம் என்றிருக்கிறேன்.
இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் ஓர் சிறு விருந்து நடந்து கொண்டிருந்தது.அதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து ஓர் சொந்த காரர் என் வயதை ஒத்தவர் தான் தன் மனைவியுடன் கலந்து கொண்டார்.அவர் என் நண்பரும் கூட.அன்றைய தினம் 3 மணிக்கு ஓர் முக்கியமான நபரை சந்திக்க போகணும் என்று வந்த மாத்திரத்திலேயே என்னிடம் சொல்லிவிட்டார்.தன் மனைவியிடமும் இவ்விசயத்தை சொல்லி தான் அழைத்து வந்ததாவும் சொன்னார்.

சரியாக 1:30 மதியம் ஆண்கள் விருந்து நடந்தது.ஓர் 8-10 ஆண்கள் தான் என்பதால் அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட்டோம்.சாப்பிட ஆரம்பிக்கும் போது நண்பர் எவ்வளவு நேரம் எடுக்குதுன்னு பார்த்து சொல்லுங்கன்னு அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் தமாஷாக சொன்னார்.நானும் நேரத்தை குறித்து கொண்டேன்.எங்கள் பந்தி சாப்பிட்டு முடிக்க தோராயமாக ஓர் 15 நிமிஷம் ஆனது.

அப்போது எனக்கு தெரியாது எதற்காக நேரத்தை நண்பர் கணக்கிட சொன்னார் என்று. சாப்பிட்டு முடித்தவுடன் அவரிடமே கேட்டேன் ஏன் நண்பா சாப்பிடும் நேரத்தை கணக்கிட சொன்னீர்கள் என்று.அவர் சொன்னார்,அந்த காமெடிய நீங்க இப்ப பார்க்கத்தானே போகிறீர்கள்.

இப்போ பெண்கள் பந்தி நடக்கும்ல.அப்போ அவங்க சாப்பிடும் நேரத்தை கணக்கிட்டு சொல்லுங்க.அப்ப புரியும் நான் ஏன் அப்படி செய்ய சொன்னேன் என்று பதில் அளித்தார்.

சரியாக 2 மணிக்கு பெண்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.சரி என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போம் என்று அனைவரும் சொந்த காரர்கள் என்பதால் சர்வே அவர்களின் செய்கைகளையும் படம் பிடிக்க ஆரம்பித்தது கண்கள்.

சரியாக பெண்கள் சாப்பிட்டு முடிக்க 40 நிமிஷம் ஆனது. ஒரு வாய் கவளம் வாய்க்கு போனதுக்கு அப்புறம் தோராயமாக ஓர் ஐந்து நிமிடம் பேச்சு பேச்சு.பேச்சை தவிர வேறொன்றும் இல்லை.

அப்படி என்னத்த தான் இந்த பெண்கள் பேசுவாங்களோ தெரியலைப்பா.அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்.பெண்கள் பேச ஆரம்பித்தால் உலகத்தையே மறந்துடுவாங்கன்னு.

இடைஇடையே என் நண்பர் வேற பொறுக்க முடியாம திட்டி/நெளிந்து கொண்டே பாருங்க முஜிப் சாப்பிடுதுங்களான்னு,தொனத்தொனன்னு பேச்சு தான் தெரியுதே ஒழிஞ்சி சாப்பிட்டு எழுந்திறிப்போம் என்கிற எண்ணமே இவர்களுக்கு வராது என்று அலுத்து கொண்டார். அவர் எங்கள் வீட்டை விட்டு கிளம்ப 2:50 ஆகி விட்டது.அப்புறம் எங்க அவர் சொன்ன சந்திப்பு 3 மணிக்கு நடந்திருக்க போகிறது.???கோவிந்தா கோவிந்தா தான்!!!!!!!
ஹா ஹா

நேசத்துடன்
முஜிப்

Monday, March 20, 2006

விடுமுறை நாட்கள் கழிந்து வந்த பின்

கண்களின் ஓரம் ஏனோ ஈரம்..
நெஞ்சினில் குடிபுகுந்தது சோகம்..

இறக்கி வைக்க முடியாத பாரம்..
பிரிவதனால் ஏற்பட்டதோ ஏக்கம்..

நினைவுகளால் தொலைந்து போனது தூக்கம்..
காலத்தின் கட்டாயம் இந்த மாற்றம்..

தொலைபேசி ஊடாக அனேக பறிமாற்றம்..
நட்புகளால் இடை செறுகலாக ஊக்கம்..

ஊதியமாக வந்து போகும் உற்சாகம்..
படி படியாக குறைந்து விடும் தாக்கம்..

அடுத்த பயண எதிர்பார்ப்பு அநேகம்..
உண்மையில் இது ஓர் தியாகம்........

நேசத்துடன்
முஜிப்

விடுமுறை நாட்கள்

என் விடுமுறை நாட்கள்
மனதுக்குள் தென்றல் தவழ்ந்து வரும் காற்றலைகளாய்!
வண்ணமயில்கள் தோகை விரித்தாடும் குதூகலமாய்!!
வண்ணமலர்கள் பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்!!!

கூக்குரல்கள் செந்தமிழ் ராகங்களாய் பாட்டிசைக்க!
மகிழ்ச்சியெனும் மழைசாரலில் இதமாய் நனைந்து!!
பாலகனாய் கற்பனைகளுடன் இல்லம் போய்சேர!!!

சொந்தபந்தங்கள் நட்புபாராட்ட சிலிர்க்கவைக்கும் தருணங்களாய்!
பாசமலர்கள் அரவணைப்பில் நொடிப்பொழுதில் நாட்பொழுதுகளாய்!!
தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் விருந்தோம்பல்களாய்!!!

நண்பர்களின் ஆக்கிரமிப்பில் கண்ணெதிரே நினைவலைகளாய்!நினைத்தபொழுதில் அங்குமிங்கும் சுற்றி திறியும் சிட்டுகுருவியாய்!!மழலைகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கிய நிகழ்வுகளாய்!!!

பொறுப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் நிமிடங்களாய்!
பிரிவின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் மெய்சிலிர்ப்புகளாய்!!
சோகத்தின்ஊடே பொறுப்பின் பயணம் தொடர்கிறது!!!

பி.கு.: இந்த தொகுப்பு, சொந்த பந்தங்களை,நண்பர்களை பிரிந்து சவுதியில் வேலையில் இருக்கும் நான் விடுமுறையில் தாயகம் செல்லும்/சென்றிருந்த போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கம்.
நேசத்துடன்
முஜிப் - அல்கோபர்

ஆண்டவனிடம் கேட்டதும்,கிடைக்கப் பெற்றதும்

நான் ஆண்டவனிடம் கேட்டதும்,அவனால் கிடைக்கப் பெற்றதும்...

நான் ஆண்டவனிடம் துணிவு,வலிமையினை கேட்டேன்.
ஆனால் அவன் எனக்கு இடர்பாடுகளை கொடுத்து என்னை மேலும் வலிமையுள்ளவனாக்கினான்...

நான் ஆண்டவனிடம் நுண்ணறிவாற்றலை கேட்டேன்.
அவன் எனக்கு பிரச்சனைகளை கொடுத்து நுண்ணறிவாற்றலுக்கு விடை காண தூண்டினான்...

நான் அவனிடம் சொத்து சுகத்தினை கேட்டேன்.
அவன் எனக்கு சிந்திக்கும் முளையையும்,வலிமையையும் கொடுத்து வேலை செய்ய தூண்டினான்...

நான் அவனிடம் வீரம்,துணிவினை கேட்டேன்.
அவன் எனக்கு ஆபத்தை கொடுத்து அதிலிருந்து விடுபடுவதெப்படி என்பதை கற்று தந்தான்...

நான் அவனிடம் அன்பாதரவிவை கேட்டேன்.
அவன் எனக்கு நல்ல சந்தர்பங்களை ஏற்படுத்தி கொடுத்தான்...

நான் கேட்ட எதுவும் அவன் எனக்கு கொடுக்கவில்லை.
ஆனால் எனக்கு தேவையான அனைத்தும் அவனால் கிடைக்கப்பெற்றேன்.
நேசத்துடன்
முஜிப்

காதல் காதல் காதல்

காதலை இப்படி வகைப்படுத்தலாமா...

சந்தர்ப்பத்தால் காதல் பிறக்கும்!!!
தெய்வீகத்தால் காதல் சிறக்கும்!!!

விட்டுக்கொடுத்தலால் காதல் நெகிழும்!!!
அரவணைப்பால் காதல் பூரிக்கும்!!!

நேசிப்பால் காதல் புன்னகைக்கும்!!!
கனவுகளால் காதல் சிறகடிக்கும்!!!

பிரிவுகளால் காதல் நிலைக்கும்!!!
சம்பாஷனைகளால் காதல் வளரும்!!!

புரிந்துகொள்ளுதலால் காதல் நிறையும்!!!
நினைவலைகளால் காதல் மகிழும்!!!

(சமயத்தில் விம்மி அழும்....)!!!!!!

நேசத்துடன்
முஜிப்

ஓர் வேண்டுகோள்

எங்கள் இறைவா,
எங்களுக்கு...


அன்பை தா
அருளை தா
அனுதினமும் தா...

பண்பை தா
பாசத்தை தா
தழைத்தோங்கத் தா...

உழைப்பை தா
உயர்வை தா
பார்புகழத் தா...

பொன்னை தா
பொருளை தா
மனமகிழத் தா...

அமைதியை தா
மனிதத்தை தா
இப்புவியெங்கும் தா...

மகிழ்ச்சியை தா
குதூகலத்தை தா
என்றென்றும் தா...

வெற்றியை தா
விவேகத்தை தா
வீறுநடைபோடத் தா...

தன்னிறைவை தா
மனநிறைவை தா
அனைவருக்கும் தா...

சமத்துவத்தை தா
நிதானத்தை தா
மனம்நிறையத் தா...

நேசத்துடன்
முஜிப்