என் மன வானில்

Saturday, April 29, 2006

பரவசம்-ஓர் கவிதை


முதன் முதலில்....

மழலை மொழி பேச
கேட்ட தாய் அடைந்த
பரவசத்தை போல...

முதல் மதிப்பெண் எடுத்து
தேர்ச்சி பெற்ற மாணவனின்
பரவசத்தை போல...

லாட்டரியில் முதல் பரிசு
கிடைக்க பெற்ற வறியனின்
பரவசத்தை போல...

அறுவடையில் அமோக மகசூல்
பெற்ற ஏழை விவசாயியின்
பரவசத்தை போல...

தவம் இருந்து பெற்றெடுத்த
குழந்தையை பார்த்த தம்பதியினரின்
பரவசத்தை போல...

பாகுபாடு இல்லா மனிதநேயம்
போற்றிடும் உங்களை நட்பாக
கிடைக்கபெற்ற நான்
மகிழ்ச்சியில் பரவசமடைகிறேன்.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Tuesday, April 25, 2006

சில தலைப்புகளும் அதன் குளிர்ச்சியான அர்த்தங்களும்...


சில தலைப்புகளும் அதன் குளிர்ச்சியான அர்த்தங்களும்

சிகரெட்: ஒரு காகிதத்தில் சுற்றப்பட்ட சிட்டிகையளவு புகையிலையில் நெருப்பு ஒரு முனையிலும்,முட்டாள் மறுமுனையிலும்.

காதல் விவகாரம்: ஒரு வகையில் கிரிக்கெட்டை போன்றது.,ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் போட்டிகள் மிகவும் பிரபலமானதாகவும்,விறுவிறுப்பாகவும் இருக்கும்.

கல்யாணம்: இவ்வுடன்படிக்கையுன்படி ஆண்கள் தங்கள் பேச்சலர் டிகிரியை இழந்தும்,பெண்கள் மாஸ்டரையும் அடைய பெறுவார்கள்.

விவகாரத்து: திருமணத்தின் எதிர்கால வினைச்சொல்.

விரிவுரை(லெக்சர்): இக்கலையின் படி விரிவுரையாளரின் கையேட்டிலிருந்து, குறிப்புகள் மாணவர்கள் குறிப்புகள் கையேட்டுக்கு கடந்து செல்லும் தன்மை கொண்டது.ஆனால் இவர்களிருவரின் மூளைகளையும் கடந்து செல்லாது என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.

மாநாடு(கலந்தாய்வு கூட்டம்): மாநாட்டிற்கு வந்துள்ள ஒருவரின் குழப்பத்தை, பங்கு கொண்டிருக்கும் ஒட்டு மொத்த நபர்களின் எண்ணிக்கையால் பெருக்கி கொள்ள வேண்டும்.

சமாதானம்: இக்கலையின் எடுத்துக்காட்டு என்னவென்றால் ஒரு கேக்கை சமபங்காக வெட்ட வேண்டும்.வெட்டபட்ட கேக்கை சாப்பிட்ட அனைவரும் தனக்கு கிடைத்த துண்டே மிகப் பெரியது என்று திருத்திபட்டு கொள்ள வேண்டும்.

கண்ணீர்: நீரோட்ட உந்துதல் விதியின் படி பெண்களின் தண்ணீர் சக்தியால் ஆண்களின் மனோதிட சக்தி தோற்கடிக்கப்படும்.

மாநாட்டு அறை: இங்கே பேச்சாளருடைய பேச்சை செவி மடுக்காமல்,அனைவரும் பேசி கொண்டும் அரட்டை அடிக்கவும் உபயோகப்படும் இடம்.கடைசியில் கலந்து கொண்ட அனைவரும் கருத்து வேறுபாடு கொள்வார்கள்.

இலக்கியம்: அனைவராலும் போற்றப்படும் புகழ்ந்து பேசப்படும் ஓர் உன்னதமாக புத்தகமாகும்.கூத்து என்னவென்றால் யாரும் இதை படிக்க மாட்டார்கள்.

புன்னகை: வளைவு கோடுகளாக இருந்தாலும் பல விசயங்களை நேர்படுத்தும் தன்மை கொண்டது.

கொட்டாவி: திருமணமான சில ஆண்கள் வாயை திறக்க அனுமதிக்கபடும் நேரம்.

Etc., : உண்மையாகவே தெரிந்ததை விட அதிகமான விசயங்கள் தெரிந்திருப்பவர் என்று அடுத்தவர்களை நம்ப வைக்க உபயோகப்படுத்தபடும் குறிப்பு.

அனுபவம்: தான் செய்த தவறுகளுக்கு மனிதனால் கொடுக்க பெற்ற பெயர்.

அணுகுண்டு: கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை அழித்தொழிக்க பயன்படும் கண்டுபிடிப்பு.

சந்தர்ப்பவாதி: தவறுதலாக ஆற்றில் விழுந்தாலும் கூட குளிக்கும் தன்மையுடையவர்.

எஜமானன்: நீங்கள் தாமதமாக செல்லும்போது முன்னதாகவும்,நீங்கள் முன்னதாக செல்லும் போது தாமதமாகவும் வருபவர்.

அரசியல்வாதி: தேர்தலுக்கு முன் கையை குலுக்குவார்.தேர்தல் முடிந்த பின் நம்பிக்கையை குலுக்குவார்.

மருத்துவர்: சுகவீனங்களை மருந்துகளாலும்,நோயாளியை சேவை கட்டணத்தாலும் கொல்லுவார்.

கடன்: வாங்குபவருக்கு கொடுப்பவர் கடவுளாகவும்,இனிப்பாகவும் தெரியும்.திருப்பி கொடுக்கும் போது கொடுத்தவர் விரோதியாகவும் கசப்பாகவும் தெரியும்.


mujibudeen@gmail.com
முஜிப்-அல்கோபர்

Sunday, April 23, 2006

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...

பஸ் நிழற்குடையில் நின்று கொண்டிருக்கும் ஓருவரை (X) விற்பனை பிரதிநிதி( Y) தன் கம்பெனியின் பொருட்களை சந்தை படுத்தும் நோக்கில் பேச்சு கொடுக்கிறார்.இவர்கள் இருவருக்குமிடையே நடந்த சுவையான உரையாடல்கள் இதோ உங்கள் பார்வைக்கு...

X: நீங்கள் எந்த மாதிரி சேவிங் கீரிம் உபயோகிக்கிறீங்க?
Y: பாபாவோட...

X: சவரம் செய்த பிறகு எந்த வகை aftershave உபயோகிப்பீங்க?
Y: பாபாவோட...

X: எந்த வகை டியோடரண்ட் உபயோகிக்கிறீங்க?
Y: பாபாவோட...

X: பல் துலக்க எந்த வகை பற்பசை பயன்படுத்துவீங்க
Y: பாபாவோட...

X: எந்த வகை ஷாம்பூ அதிகம் பயன்படுத்துவீங்க?
Y: பாபாவோட...

X: எந்த வகை உள்ளாடைகள் விரும்பி அணிவீங்க?
Y: பாபாவோட...

X: மலைத்து போய்,ஆச்சர்யத்துடன் சரி பாபா ங்கிறது ஒரு பன்னாட்டு நிறுவனமா?நான் கேள்விபட்டதே இல்லையே???
Y: இல்லையில்லை.பாபா என் ஓரறை தோழன்(roommate).

ஹா ஹா ஹா....

முஜிப்-அல்கோபர்
mujbudeen@gmail.com

கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுப்போம் வாங்க

சரி நான் ஓரு புதிர் போட்டு பார்க்கிறேன்.
ஒருவர் கையில் கொஞ்சம் பூக்களுடன் கோவிலுக்கு செல்கிறார்.

கோவில் வாசலில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை போட்டால் தான் வாசல் கதவு திறக்கும்.

மூன்று வாசல்களை கடந்து தான் தரிசனத்துக்கு செல்ல வேண்டும்.

தெப்ப குளத்தில் அவர் எத்தனை பூக்களை போடுகிறாரோ அது இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கும்.

மூன்று முறை தான் குளத்தை உபயோகிக்கமுடியும்.

--------------------------------------------------------------

முதலில் குளத்தில் அவர் கொண்டு வந்த பூக்களை போடுகிறார்.அது இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை முதல் வாசலில் போடுகிறார்.முதல் வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் மீதமுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக கிடைக்கிறது.

அவற்றில் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூக்களை இரண்டாவது வாசலில் போடுகிறார்.இரண்டாவது வாசல் திறக்கிறது.

மீண்டும் தெப்ப குளத்தில் எஞ்சியுள்ள பூக்களை போடுகிறார்.இரண்டு மடங்கு பூக்களாக திரும்ப கிடைக்கிறது.

கிடைத்த அனைத்து பூக்களையும் மூன்றாவது வாசலில் போடுகிறார்.கதவு திறக்கிறது.தரிசித்து விட்டு வெருங்கையுடன் வீடு திரும்புகிறார்.

கேள்வி இது தான்.

1)அவர் எத்தனை பூக்கள் வரும்போது கையோடு எடுத்து வந்தார்?

2)ஒவ்வொரு வாசலிலும் கதவு திறக்க எத்தனை பூக்களை போட்டார்?

பி.கு : மூன்று வாசல்களையும் திறக்க ஒரே எண்ணிக்கையிலான பூக்கள் தான் போட பட வேண்டும்.

எங்கே விடை சொல்லுங்கள் பார்ப்போம்??

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Saturday, April 22, 2006

கவலை எனும் சக்கரம்

கவலை உணர்வு வந்தால்
மனசு முழுக்க!!!

அமைதியை நாடுது..
நேர்வழியை தேடுது..
பாவ மன்னிப்பு கோருது..
குற்ற உணர்ச்சிகள் குத்தூசியாய் குத்துது..
சபல புத்திக்கு சவுக்கடி கொடுக்க துடிக்கிது..
கெட்ட எண்ணங்கள் தலைதெறிக்க ஓடுது..
இறைநம்பிக்கை மேலோங்குது..
நற்செயல்கள் செய்ய தூண்டுது..
பிராத்தனைகள் வேண்டுது..
சற்று கவலை தீர்ந்த பின்
மகிழ்ச்சி குடிபுகுந்து,
சந்தோஷம் ஆரம்பமானால்
மெல்ல மெல்ல அனைத்தையும் மறந்து
வேதாளம் பழையபடி முருங்கைமரம் ஏறி
மிருகமாய் மாறுது.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Tuesday, April 18, 2006

மறக்க முடியாத தருணங்கள்-9

சமீபத்தில் எங்கள் செல்ல மகளை பள்ளியில் சேர்த்தாச்சு. இன்னும் பள்ளி செல்லவில்லை.ட்யூஷன் படிச்சிட்டுருக்காங்க.

கொஞ்ச நாட்களுக்கு முன் என் மகளிடம் தொலைபேசும்போது (எங்கூட்டு காரங்க SSLC வரை தான் படிச்சிருக்காங்க.) உங்க அம்மா மாதிரி படிக்காம இருந்திடாதே.உன் டாடி மாதிரி நல்லா படிச்சி பெயர் வாங்கணுன்னு விளையாட்டாய் சொன்னேன்.

இத லவ்டு ஸ்பீக்கர் மோட்ல கேட்டுட்டு உடனே போனை பிடுங்கி என் மனைவி ஒரே திட்டு.ஒன்னும் சொல்ல முடியாம வாங்கி கட்டிகிட்டேன்.

பிரச்சனை என் மனைவி திட்டினது இல்லை.சரி விசயத்துக்கு வருகிறேன்.இரண்டொரு நாட்களுக்கு முன் என் மனைவி,என் மகளை படிக்க சொல்லி பக்கத்தில் உட்கார்ந்திருக்காங்க.

அப்போ என் மகள் கேட்டிருக்கா.

"ஏம்மா டாடி என்னைய மாதிரி நல்லா சவுதில படிக்குதாம்மா.நீ மட்டும் ஏன் படிக்காம சும்மா என்னை மட்டும் படிக்க சொல்லுற.டாடி மாதிரி நீயும் படிக்கலாம்ல " என்று கேட்க,திடீர் கேள்வி கணைகளால் திக்குமுக்காடி பதில் சொல்ல முடியாமல் எங்கூட்டுகாரங்க சிரிச்சி,வழிஞ்சி ஒரு வழியா பதில் சொல்லி சமாளிச்சிருக்காங்க.

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவையான நிகழ்வை சொல்லும் போது நான் சிரித்தாலும் கூட,என் செல்ல மகளின் லூட்டிகளை நேரில் இருந்து பார்த்து ரசிக்க முடியாததை நினைத்து மனசுக்குள் ஏக்கம் ஏற்பட்டு புழுங்கியது என்னவோ உண்மை.

முஜிப்-அல்கோபர்
mujibudeen@gmail.com

Sunday, April 16, 2006

மறக்க முடியாத தருணங்கள்-7

தார்குச்சிக்கு பற்றிய ஓர் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று.

வெள்ளிகிழமை தோறும் எங்கள் ஊர் காரர்கள் 5-8 பேர் அருகில் உள்ள ஊர்காரர் ஒருவரின் வீட்டில் கூடி விடுவோம்.
கூடி ஊர் செய்திகள்/பிரச்சனைகள்,உலக கதை/பிரச்சனை என்று கலகலப்பாக நேரம் போறதே தெரியாது.அப்படி ஓரே அரட்டையாக இருக்கும்.

இதே உண்மையில் ஊரில் இருந்திருந்தால் கூட இவ்வளவு அக்கறையோடு,செய்திகளை பறிமாறி இருப்போமா,தெரிந்திருப்போமா என்றால் நிச்சயம் இருந்திருக்கவே இருக்காது.ஒன்றை இழந்தால் தான் அதன் உண்மையான மதிப்பு அறியப்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

இது போல ஒரு வெள்ளிகிழமை அரட்டை அடித்து விட்டு மதியம் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தோம்.அன்று வழக்கத்துக்கு மாறாக தாள்சா(சாம்பார்) சாப்பாடு. எனக்கு சாப்பாடு சரியாக உள்ளே செல்லவில்லை.

நான் எப்போதும் வீட்டில் சொல்லுவது போல் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தார்குச்சி இருக்கிறதா என்று கேட்டு விட்டேன்,தெரியாத்தனமாக.

எல்லோரும் என்னை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.அதில் ஒரு நண்பர் என்னப்பா முஜிப் கொஞ்சம் முன்னடி நல்லா தானே இருந்தே என்ன திடீரென இப்படி ஆயிட்டப்பா? என வினவினார்.இன்னொருத்தர் தார்குச்சின்னா ஊருக்கு தான் போய் வாங்கிட்டு வரணும் னார்.

ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொன்னாங்க.இப்ப நீங்களும் குழம்பியிருக்கிற மாதிரி,என்னடா இவன் தார்குச்சியை கேட்கிறானேன்னு.?

எல்லாத்தையும் வாங்கி கட்டி கொண்டு நான் ஒரு கேள்வி கேட்டேன். மாடு சரியா ஓடலைன்னா என்ன பண்ணனும்னு.?அதுக்கு ஒருத்தர் தார்குச்சியால ஒரு போடு போட்டா தானா ஓடுதுண்ணார்.அதத் தான் நானும் கேட்டேன்னு சொன்னேன்.

சாம்பார் சாப்பாடு சரியாக இறங்க மாட்டுது.தார்குச்சி போன்ற ஊறுகாயை கொடுத்தீங்கண்னா என் சாப்பாட்டு வண்டி நல்லா ஓடும்பா என்று நான் நகைச்சுவையா சொன்னவுடன் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்பல்லாம் சாப்பிட உட்கார்ந்தாலே முஜிபுக்கு தார்குச்சிய முதலில் எடுத்து கொடுங்கப்பா ன்னு அடிக்கடி ஒரு நண்பர் கிண்டலடிப்பார்.

நேசத்துடன்
முஜிப்

Monday, April 10, 2006

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.

நான் ரசிக்கும் கிராம வாழ்க்கை.
கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை என்னவென்று.
  • நட்பு வட்டம்.
  • உறவினர் வட்டம்.
  • ஊரார் வட்டம்
என்று அமர்க்களபடும் கிராமங்களில்.
  • ஓர் சின்ன விசயம் என்றாலும் கூட வீடுகளில் உறவினர்களும் நண்பர்களும் கூடி விடுவார்கள்.
  • சொந்த பந்தங்கள் ஊரார் அனைவரையும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
  • சிறிது நாட்கள் வெளியூர் சென்று திரும்பினாலும் கூட பார்ப்பவர் அனைவரும் நலம் விசாரித்து அன்பு மழை பொழிவர்.
  • சமயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வீடுகளில் உதவு கோராமலேயே உதவி கொண்டிருப்பார்கள் நல விரும்பிகள்.
  • பலனை எதிர்பார்க்காது பழகும் தன்மையையும்,ஊருக்காக ஊர் நலனுக்காக தங்களை அர்பணித்து கொள்ளும் பெரியவர்களையும் சிறியவர்களையும் அதிகம் கிராமங்களில் காணலாம்.
  • பச்சை பசேல் வயல்வெளிகள், ஆறுகள், குட்டைகள், குளங்கள், ஆராவாரமற்ற நெருக்கடி இல்லாத ரம்மியமான சூழ்நிலை,என்று கிராமங்களில் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
  • பணம் ஒன்றே குறிக்கோள் என்றில்லாதவர்கள் நிச்சயம் கிராமங்களையும் அதன் வேர்களாக பிண்ணி பிணைந்திருக்கும் சொந்த பந்த நட்புகளை விட்டு ஒரு போதும் தூரம் சென்றுவிடமாட்டார்கள்.
கிராமங்களில் தற்காலத்திற்கேற்ப வசதி வாய்ப்புகளும் நவீன வசதிகளும் சற்று குறைவாகவே இருந்தாலும் கூட மனம் லயிக்கும் கிராமத்தின் சிறப்புகளுக்கும் சொந்த பந்த நட்புகளின் அன்புக்கு முன்னால் என் பார்வையில் கிராம,நகர வாழ்க்கைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கிராம வாழ்க்கையே மேலாதனாகவும் மேலூங்கியும் கம்பீரமாக நிற்கிறது.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-8

மறக்க முடியாத தருணங்கள்-8

சமீபத்தில் இங்கு அல்கோபரில் வழமையாக உணவருந்த செல்லும் ஹோட்டலுக்கு என் நண்பர்களுடன் சென்றிருந்தேன்.நண்பர்களில் ஒருவன் எப்போதும் சிரிக்கும் படியாக ஜோக் அடித்து கொண்டே இருப்பான்.

ஆளாளுக்கு தேவையானதை ஆர்டர் செய்தோம். இவனை தவிர அனைவரும் சிக்கன் ப்ரை ஆர்டர் கொடுக்க (இவனுக்கு பறவை காய்ச்சல் வந்து விடுமோ என்று பயம்னு நினைக்கிறேன். ஏன் என்று சொன்னால் எப்போதும் சிக்கன் ஆர்டர் கொடுப்பவன் எனக்கு சிக்கன் வேண்டாம் மட்டன் குருமா வேணும்மு ஆர்டர் கொடுத்தான்).

மட்டன் குருமா முந்தைய நாள் சமைத்ததை ரீமேக் போல சுவையே இல்லை போலிருக்கு. இவன் உடனே சர்வரை கூப்பிட்டான். இங்க பாருங்க என் கிட்ட ஒரு மக்கினா (அரபியில் மக்கினா என்றால் இயந்திரம்) இருக்கு. அது பொய் பேசினா உடனே சத்தம் கொடுக்கும் என்று சொல்லி விட்டு மட்டன் குருமா எப்ப ரெடி பண்ணது ன்னு கேட்டான்.

வழக்கம் போல் வழமையாக சொல்வது போல் சர்வர் "இன்னிக்கி தாங்க சமைத்தது" என்று சொல்ல, இவன் உடனே "டோன்ய்ய்ய்ய்" என்று சத்தம் கொடுக்க உணவருந்துபவர்கள், உரிமையாளர் உட்பட அனைவரும் அடக்க முடியாமல் குபீரென சிறிது நேரம் சிரித்து விட்டனர்.

நேசத்துடன்
முஜிப்

வெற்றியின் ரகசியங்கள்

வெற்றியின் ரகசியங்கள்

கப்பல் கரையில் இருந்தால் பாதுகாப்பாக, பத்திரமாகத் தான் இருக்கும். ஆனால் கப்பல் தயாரிக்கப்பட்டதன் குறிக்கோள் இதற்காக அல்ல.

ஒரு காரியம் எடுத்து செயல்படுத்தும் தருணங்களில் சமயங்களில்,இன்னல் துயரங்கள்,கஷ்டங்களை சந்திக்க நேரிடுவது வாடிக்கையே. இதனை கண்டு நாம் சோர்ந்து விடுதல் கூடாது.

நாம் நெஞ்சுரத்தையும்,மனோவலிமையையும் தைரியத்தையும், கஷ்டநஷ்டங்களை சமாளிக்கும் யுக்திகளை வளர்த்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும்.அப்போது தான் நாம் எட்ட நினைக்கும் லட்சியத்தை ஒரு நாள் அடையமுடியும்.

சந்தேகம்,கவலை,பயம்,ஐயம் பலரை அதிகமதிகம் வாட்டி எடுத்து அவர்கள் முன்னேற்றத்துக்கு தடைகற்களாக அமைந்து விடுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இந்த மாதிரியான அச்சங்களையும் கவலைகளையும் தூக்கி எறிந்து விட இவர்களாலும் முடியும் என்பதற்கு உதாரணமாக நம்மை நாமே முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம்.

நாம் நடைபழகும் குழந்தையாக இருக்கும் போது முதல் முறையாக தள்ளாடி தள்ளாடி நடக்க முயற்ச்சிக்கும் போது இந்த உலகமே சுற்றுவது போன்று இருக்குமாம்.

இதனை கண்டு நடைபயிலும் குழந்தைகள் பயந்து நடக்க எத்தனிக்கும் முயற்சியை விட்டுவிடுவதில்லை.சோர்ந்துவிடுவதில்லை.

மாறாக எப்படியும் சீக்கிரம் நடந்துவிட வேண்டும் என்ற தீப்பிழம்பு ஆழமாக நடைபயிலும் மழலைகள் மனதில் இயற்கையாகவே இருப்பதால் தான் இவர்களால் எழுந்து நடப்பது சாத்தியமாகிறது.

நாம் மழலைகளாக தவழும் பருவத்தில் அச்சம்,பயம் இருந்திருக்குமேயால் நம்மால் நடக்க முடிந்திருக்குமா.? சற்று யோசித்து பாருங்கள்..ஆக விடாமுயற்சிக்கு உதாரணமாக நம்மை நாமே எடுத்து கொள்ளலாம்.

முயற்சி செய்தால் முடியாதது என்று ஒன்று இல்லை.
விடாமுயற்சி,தன்னம்பிக்கை,லட்சியம் என்கிற கயிற்றினை பற்றி பிடித்து கொண்டால் வெற்றி நம் கைக்கு எட்டும் தூரத்தில் தான் என்பதை நாம் மனதில் உறுதியாகவும் திண்ணமாகவும் கொள்ளல் வேண்டும்.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

Saturday, April 08, 2006

ஓர் சிந்தனை....

ஓர் சிந்தனை....

நீங்கள்,
நீங்களாக்கி கொள்ளூங்கள்- உண்மையாக
ஒத்து கொள்ளூங்கள்- பொருத்தமாக
மதிப்பிட்டு கொள்ளுங்கள்-மகிழ்ச்சியாக
மன்னித்து கொள்ளூங்கள்- முழுவதுமாக
நடந்து கொள்ளுங்கள்- பெருந்தன்மையாக
நிலைபடுத்தி கொள்ளுங்கள்-இணக்கமாக
மகிழ்ச்சிபடுத்தி கொள்ளுங்கள்-அதிகமாக
நம்பி கொள்ளுங்கள்-உறுதியாக
காதல் கொள்ளுங்கள்-மனப்பூர்வமாக
பழக்கபடுத்தி கொள்ளுங்கள்-பிராத்தனையாக
அர்பணித்து கொள்ளுங்கள்-உற்சாகமாக
வெளிப்படுத்தி கொள்ளுங்கள்-சுடரொளியாக.

நேசத்துடன்
முஜிப்

மறக்க முடியாத தருணங்கள்-6

மறக்க முடியாத தருணங்கள்-6
சமீபத்தில் என் மனைவி எங்கள் திருமண ஆல்பத்தை சரி செய்திருக்கிறாள்.அது சமயம் என் மகள் ஆல்பத்தை பிடுங்கி ஒவ்வொரு போட்டோவாக இது டாடி,இது அம்மா அப்படி இப்படின்னு அளந்து பேசி முத்தம் போட்டு விட்டு ஆல்பத்தை என் மனைவியிடம் கொடுத்து விட்டு "என் கூட நீ பேச வேண்டாம் போ" என்றிருக்கிறாள் என் மனைவியிடம் கோபித்து கொண்டவளாய் என் செல்ல மகள்.

என் மனைவிக்கு இவள் கோபம் சற்றென்று புரியவில்லை. ஏன் நல்லா தானே ஆசையா போட்டோல்லாம் பார்த்தே?, என்னாச்சுன்னு கேட்கப் போக என் மகள் சொல்லியிருக்கிறாள்,
"பின்ன என்னவாம் ஒரு போட்டோவுல கூட உங்க பக்கத்துல என்னை வைச்சி படம் எடுக்கலைன்னு".

என் மனைவி தொலைபேசியில் இந்த சுவாரஸ்யமான செய்தியை சொல்லப்போக நானும் என் மனைவியும் விழுந்து விழுந்து சிரித்தோம்.
அப்ப நீங்க???
ஹிஹி...
நேசத்துடன்
முஜிப்

Wednesday, April 05, 2006

பல்வேறு வயது நிலைகளில் நம் அப்பாவை பற்றி என்ன நினைப்போம்?

பல்வேறு வயது நிலைகளில் ஓர் பையன்/பொண்னு தன் அப்பாவை பற்றி கேட்டால் எப்படியெல்லாம் சொல்லுவார்கள்.

பாருங்கள்.சிரியுங்கள்.சிந்தியுங்கள்....

4 வயதாகும் போது-
எங்க அப்பா ரொம்ப நல்லவரு.

6 வயதாகும் போது-
எங்கப்பாவுக்கு எல்லாரையும் தெரியும்.

10 வயதாகும் போது-
எங்கப்பா நல்லவரு தான் ஆனா சரியான சிடுமூஞ்சி.

12 வயதாகும் போது-
ஹீம்.. எங்கப்பா நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ரொம்ப அன்பா நடந்துகிட்டார்.

14 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பா தொட்டதுக்கெல்லாம் குறை கண்டுபிடிக்கிறாரு.

16 வயதாகும் போது-
எங்கப்பா இன்னும் பழங்காலத்திலே மண்டி கிடக்கிறார்.
எப்பத் தான் இவ்வுலகத்துக்கு மாறுவாரோ தெரியலை.

18 வயதாகும் போது-
எங்கப்பாக்கு வர வர மரை அதிகமா கழன்று போயிட்டுருக்கு.

20 வயதாகும் போது-
இப்பல்லாம் எங்கப்பாவோட தொல்லைகளை சகித்து கொள்ள முடிய மாட்டேங்குது.
பாவம்!!எப்படி தான் இவ்வளவு காலமா எங்கம்மா பொறுத்துகிட்டு இருக்காங்களோ தெரியலைப்பா.

25 வயதாகும் போது-
நான் எது சொன்னாலும் அதில் தப்பு கண்டுபிடிச்சி திட்டிட்டுறுக்கார்.
லொல்லு தாங்க முடியலை.

30 வயதாகும் போது-
வர வர என் மகனை சாமாளிப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
நான் எல்லாம் இவன் வயசில் எங்கப்பாவுக்கு பயந்துகிட்டிருந்தேன்.

40 வயதாகும் போது-
எங்கப்பா என்னை ரொம்ப ஒழுக்கத்தோடு வளர்த்தார்.
நானும் என் பையனை ஒழுக்கத்தோடு தான் வளர்ப்பேன்.

45 வயதாகும் போது-
எப்படி தான் எங்கப்பா எங்களையெல்லாம் வளர்த்தாரோ?
நினைச்சி பார்க்கவே பயமா இருக்கு.

50 வயதாகும் போது-
எங்கப்பா எங்களையெல்லாம் இந்த நிலைமைக்கு கொண்டுவர ரொம்ப கஷ்டங்களையும் துயரங்களையும் சந்தித்தார்.
இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் என்னால ஒரு மகனை சமாளிக்கிறது ரொமப கஷ்டமா தெரியுது.

55 வயதாகும் போது-
எங்கப்பா தொலைநோக்கு பார்வையுடன் எங்கள் நல்லதுக்காக நிறைய செஞ்சார்.
அவர் போல அன்பானவரை பார்க்கிறது ரொம்ப கஷ்டம்.

60 வயதாகும் போது-
எங்கப்பா போல வராது.எங்கப்பா எங்கப்பா தான்.!!!

ஆக 56 வருஷம் ஆனதுக்கப்புறம் நம் அப்பாவின் உண்மையான மதிப்பு நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.நாட்கள் கடந்து விடுவதற்கு முன் நம் பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்து மதித்து நடக்க பழக்கபடுத்தி கொள்ள முயற்சிக்கவேண்டும்.

நேசத்துடன்
முஜிப்

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

காற்றே,உந்தன் பெயர் தான் காதலோ?

சமயங்களில்

தென்றலாய் தவழ்ந்து வந்து
மகிழ்ச்சியாய் இதயத்தை வருடுகிறாய்!!!

அமைதியாய் சப்தம் இல்லாது
நினைவுகளை தந்து மெளனிக்கிறாய்!!!

குளிர்ச்சியாய் உள்ளமெங்கும் பரவி
பசுமையான நிகழ்வுகளை அசைபோடுகிறாய்!!

நெருப்பாய் உயிர் பெற்று
இதயத்தை வாட்டி எடுத்து சோதிக்கிறாய்!!!

சூறாவளியாய் சுழன்று வந்து
சேதம் ஏற்படுத்தி மீளாத்துயரில் ஆழ்த்துகிறாய்!!!

நேசத்துடன்
முஜிப்

புன்னகை

புன்னகை

என்றென்றும் பண்புநயமும் புன்னகையும்
மழலையர் முகம் போல் மலரட்டும் நம் வாழ்வில்,
மனக்கஷ்டத்தில் உழலும் அநேகர்களுக்கு
மறுமலர்ச்சி அடைய செய்யும் அருமருந்தாக...

நாளை ஒருகால் நாம் கஷ்டத்தில் உழலும் தருணம்
யாரேனும் நமை பார்த்து உதிர்க்கும் புன்னகை
பொன்நகையாக மகிழ்ச்சியின் பக்கம்
நம்மை அலங்கரிக்குமல்லவோ???

இதற்கு ஏது ஈடு இப்புவிதனில்
எனவே விலையற்ற,விலைமதிப்பிடமுடியாத
புன்னகை சிந்துங்கள் பொன்நகை போல் என்றென்றும்....

நேசத்துடன்
முஜிப்.

Tuesday, April 04, 2006

மறக்க முடியாத தருணங்கள்-5

மறக்க முடியாத தருணங்கள்-5

நான் சமீபத்தில் தாயகம் அதாங்க எங்க கிராமத்துக்கு விடுமுறையில் சென்றிருந்த போது நடந்த இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது.

ஒரு நாள் அந்திமாலைபொழுதில் என் அப்பா கொல்லைபுற கடைசியில், வேளைக்கு ஓர் ஆளை வைத்து கொண்டு விறகுகளை அடுக்க சொல்லி அதன் அருகில் நின்று கொண்டிருந்தார்கள்.

நானும் அச்சமயம் கொல்லைபுறம் சென்று எப்படி வேலை நடக்கிறது என்று பார்த்து கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தில் என் மகள் (வயசு 3+ அப்போது) கொல்லைபுறம் வந்து என் அருகில் நின்று கொண்டாள்.

என் அப்பா கொல்லைபுறம் செருப்பு போடாமல் வந்தால் திட்டுவார்கள் என்பதால் ஐஸ் வைப்பதற்காக என் அப்பாவை பார்த்து என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்கப்பா என்று கேட்டாள்.

அதற்கு என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று கிண்டலாக பதில் சொன்னார்கள்.என் அப்பா சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது.என் பக்கத்தில் நின்றிருந்த அவள் காதிலும் நன்றாக கேட்டிருக்கும்.

ஆனால் என் மகள் சிரிச்சிகிட்டே என்னப்பா சொன்னீங்க.என் காதுல விழலப்பா என்று திரும்ப மடக்கினாள்.மறுபடியும் என் தகப்பனார் விளையாடிகிட்டு இருக்கேன் என்று பதில் சொல்ல அப்புறம் நான் சிரித்ததற்கு பிறகு தான் என் தகப்பனாருக்கு என் மகளின் மடக்கல் புரிந்தது.

அப்போது நான் மனதுக்குள் நினைத்து சிரித்து கொண்டேன்.நம்ம பொண்ணு லொல்லு பண்ணுவதில் எங்கே நமக்கே அல்வா கொடுத்துடுவா போலிருக்கேன்னு..

ஹா ஹா.

நேசத்துடன்
முஜிப்-அல்கோபர்

Saturday, April 01, 2006

மறக்க முடியாத தருணங்கள்-4

மறக்க முடியாத தருணங்கள்-4

கடந்த வாரம் எங்கூட்டுகாரங்களுக்கு சளி பிடித்திருந்தது.என் மனைவிக்கு சளி பிடித்திருந்தால் தொண்டையை சரி செய்ய கரகரவென்று கனைப்பது வழக்கம்.

இதே போல் நான் ஊரில் இருக்கும் போது செய்தால் கிண்டலுக்காக நானும் சேர்ந்து கர கரவென்று சவுண்ட் விட்டு வாங்கி கட்டி கொள்வது வழக்கம்.

ஆனால் இது போன்ற சேட்டைகளை என் மகளின் (தற்போது வயது 4) பார்வையில் ஒரு போதும் செய்தது இல்லை.

இரண்டொரு நாட்களுக்கு முன் ஓர் பொன்மாலை பொழுதில் என் மகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருக்கிறாங்க என் மனைவி.அப்போது இடையே குரலை சரி செய்ய கர கர (அட்ஜஸ்மெண்ட்) சரி செய்திருக்கிறாள்.

அச்சமயத்தில் நன்றாக படித்து கொண்டிருந்த என் மகள் (என்னை போலவே) படிப்பதை நிறுத்தி விட்டு என் மனைவி செய்வதை போலவே கர கர தொண்டை சரி செய்வது போல இமிடேட் பண்ணி விட்டு டக்கென்று திரும்ப படிக்கஆரம்பித்திருக்கிறாள் என் செல்ல மகள் :-)

இதை பார்த்து வியந்து, உடனே பொறுக்க முடியாமல் என் மனைவி எனக்கு தொலைபேசி மூலம் இந்த சுவையான நிகழ்வை "உங்க மகள் உங்களை மாதிரியேநக்கலடிக்கிறாங்க" என்று சொல்லி ஆதங்கப்பட ஒரு கணம் என் கண்கள் என் மகளை தேடியது.வாரி அணைத்து கொள்ள கைகள் துடிதுடித்தது.அன்றைய இரவு தூங்க மறுத்தன என் கண்கள்.

உங்கள் விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.
பின்னூட்ட மின்னஞ்சல் : mujibudeen@gmail.com

நேசத்துடன்
முஜிப்-அல் கோபர்
அலைபேசி : 00966-565128721